கேரளாவில் கோவில் யானை பராமரிப்பு முகாமுக்கு முதல் பெண் அதிகாரி நியமனம்

0
136

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளில் யானைகள் இடம்பெறுவது வழக்கம். இதற்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் கோவில் யானைகள் பராமரிப்பு முகாம்கள் உள்ளன.

இதில் குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான புன்னத்தூர்கோட்டை முகாமில் 60-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாகன்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே யானைகளின் பராமரிப்பு மற்றும் அவற்றை பாதுகாப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த முகாமில் பெரும்பாலும் ஆண்களே அதிகார பொறுப்பில் இருப்பார்கள். தற்போது முகாமின் நிர்வாக அதிகாரியாக மம்மியூரை சேர்ந்த லெஜூமோள் நியமிக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதல் முறையாக இந்த பொறுப்புக்கு வந்த பெண் இவரே ஆவார்.

குருவாயூர் தேவஸ்தானத்தின் யானைகள் முகாமில் இதுவரை பெண் அதிகாரி யாரும் நியமிக்கப்பட்டதில்லை. 47 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த பொறுப்பை பெண் ஒருவர் ஏற்றுள்ளார்.

இந்த பொறுப்பு கிடைத்தது பற்றி லெஜூ மோள் கூறியதாவது:-

இந்த பதவிக்கு வந்த முதல் பெண்மணி என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இது பெரிய பொறுப்பு. என்றாலும் எங்கள் குடும்பம் யானைகளை நேசிக்கும் குடும்பம். இங்குள்ள யானைகள் அனைத்தும் கோவில் சடங்குகளில் மட்டுமே கலந்து கொள்ளும். அவற்றை சிறப்பாக பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.