யாழில் பதுக்கிய 1150 லீற்றர் பெற்றோல் மக்களால் கண்டுபிடிப்பு!

0
734

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு போன்ற பகுதிகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்பட்டாலும் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்படாமையினால் பொதுமக்கள் தங்களுடைய முச்சக்கர வண்டிகளை 82 வழித்தட பகுதியில் நிறுத்தி குறித்த பகுதியிலேயே தங்களுடைய இரவு நேர நித்திரையினையும் கழித்து உணவுகளையும் உட்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்குட்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1,150 லீற்றர் பெட்ரோல் இருப்பது தெரியவந்தது.

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1150 லீற்றரை கண்டுபிடித்த மக்கள்!

அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை விநியோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது. இதன் பிறகு முச்சக்கர வண்டிகளுக்கும் கார்களுக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்கப்பட்டது.

இதனிடையே நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பியவர்கள் இவ்வளவு நாட்களாக நாங்கள் இங்கு தங்கியிருந்து உணவின்றி வீடுகளுக்கு சென்று திரும்பி வந்து நின்றதற்கு எமக்குக் கிடைத்த எரிபொருள் ஏமாற்றத்தை தருகிறது என விசனத்தை தெரிவித்த வண்ணம் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசாரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.