இத்தாலியில் வீட்டுக்காவலில் ஆஸ்கர் விருது பெற்ற கனேடிய திரைப்பட இயக்குனர்

0
112

பிரபல திரைப்பட இயக்குனர் போல் ஹக்கீஸ் இத்தாலியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கனடாவை பிறப்பிடமாகக் கொண்ட 69 வயதான ஹக்கீஸ் ஒஸ்கார் விருது வென்ற திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் தென் பகுதி நகரான ஒஸ்டுனில் நடைபெறவுள்ள திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்பதற்காக ஹக்கீஸ் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த வாரம் பெண் ஒருவரை அவரது விருப்பத்திற்கு முரணான வகையில் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என ஹக்கீஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் ஹக்கீஸை உள்ளுர் பொலிஸார் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக ஹக்கீஸ் மீது பொலிஸார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண் மனப் பிறழ்வடைந்த நிலையில் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமது கட்சிக்காரர் அப்பாவி எனவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முழுமையாக நீதிமன்றில் நிராகரிக்கப்படும் எனவும் ஹக்கீஸின் சட்டத்தரணி பிரியா சௌத்ரீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திரைப்பட விழாவின் அனைத்து நிகழ்வுகளிலிலிருந்தும் ஹக்கீஸை விலக்கி வைப்பதாக திரைப்பட விழா ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.