தாயின் இறுதிக்கிரியைக்காக யாழிற்கு வந்த தமிழ் அரசியல் கைதி!

0
624

இலங்கையில் 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக சற்றுமுன்னர் யாழிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள அழைத்துவரப்பட்ட இவர் இன்று தாயின் இறுதிக்கிரிகைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெருடலுக்குள்ளாக்கியுள்ளது.

யாழ். திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரிசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த (15) புதன் கிழமை இரவு 7.00 மணியளவில் காலமானார்.

மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய் இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்வத்தின் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.

குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைக்காக ஒரு மணி நேர இடைவெளியில் வந்த இவர் இன்று தாயின் இறுதிக்கிரகைக்காக 26 வருடங்களின் பின்னர் வந்துள்ளமை அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது.

மகனின் விடுதலை தொடர்பாக சென்ற காலப்பகுதிகளில் தயாரான வாகீஸ்வரியிடம் இவ் விடயம் பற்றி வினவிய பொழுது தனது மகன் 19 வயதிலேயே சிறைக்குச் சென்றதாகவும் 26 வருடமாக சிறை தண்டனை அனுபவிப்பதாகவும் தந்தையின் இறுதி கிரிகைகளுக்கு மாத்திரம் அழைத்து வந்து கூட்டி சென்றதாகவும் அன்றில் இருந்து தான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது மகனை மத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்தனர். 4 வருடங்களின் பின் இவருக்கு எதிராக வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

பின்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் 20 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. வழக்கு தொடர்வதற்கு எம்மிடம் பொருளாதார வசதிகள் இல்லை. 26 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்.

தற்போது சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்குள் சிறுவயதில் கைது செய்யப்பட்டவரும் அதிகூடிய வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்த கைதியும் இவர்தான்.

எனவே இவர் மேல் இரக்கம் கொண்டும் எனது உடல் உள நிலையை கருத்தில் எடுத்தும் மனிதாபிமான அடிப்படையில் எனது மகனுக்கு பொதுமன்னிப்பு அளித்து இந்த அரசு அவரை விடுதலை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.