இதுதான் தமது கொள்கை! பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல்

0
448

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17-06-2022) காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்..

மேலும் அவர் தெரிவித்தது,

உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் பிரிவு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு பெற்றுத் தருமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.