கழிவறை குழியில் இருந்து 2 வயது குழந்தையின் சடலம் மீட்பு!

0
175

பாணந்துறையில் மலசலகூட குழி ஒன்றில் இருந்து 2 வயது குழந்தையின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் நேற்றைய தினம் காலை (17-06-2022) மீட்கப்பட்டுள்ளது.

களுத்துறை – பாணந்துறை வடக்கு வத்தல்பல பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை தனது 11 வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளுடன் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த நிலையில் குழந்தை இல்லாததால் குழந்தையின் தந்தையுடன் இணைந்து தேடியுள்ளார்.

இதன்போது, வீட்டின் களஞ்சிய அறையில் உள்ள மலசல கூட குழியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்போது அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு முச்சக்கர வண்டியில் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அடிக்கு மேல் ஆழம் கொண்ட மலசலகூட குழியின் மேற்பரப்பை சிறிய தகரத் துண்டு மற்றும் அட்டைப்பெட்டியால் மூடியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் முரண்பாடாக உள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.