இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கும் தென் கொரியா!

0
712

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளுக்கு தென் கொரிய அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் (16-06-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) சந்தித்த போதே இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யோல் மற்றும் அவரது கட்சியான ‘மக்கள் சக்தி கட்சி’க்கு ஜனாதிபதி கோட்டாபய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான 45 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி இலங்கைக்கு தென்கொரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்கு தென் கொரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்குமாறு தென்கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய தென்கொரிய தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.