தமிழகத்தில் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்ததில் 2 பக்தர்கள் பலி

0
148

தமிழகத்தில் கோவில் திருவிழா ஒன்றில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் தேர் திடீரென்று முன்புறமாக கவிழ்ந்தது. இதனால் தேரை இழுத்து வந்த பக்தர்கள் சிதறி ஓடினர்.

இதில் தேருக்கு அடியில் சிக்கி 57 வயதான பாப்பாரப்பட்டி சிவா காலனியை சேர்ந்த மனோகரன் மற்றும் 60 வயதான மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தர்மபுரி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாதேஅள்ளியை சேர்ந்த மாதேஷ், முருகேசன், பாப்பாரப்பட்டி அப்பு முதலி தெருவை சேர்ந்த முருகன் உள்ளிட்ட 5 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்: இருவருக்கு நேர்ந்த சோகம்