கொழும்பில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியாரை கொன்ற மருமகன்

0
364

கொழும்பு, வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது ஒரே மகளின் கணவர் என மஹாபாகே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 7ஆம் திகதி அதிகாலை 1.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அலுமாரியில் இருந்த பொருட்களை திருடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் உயிரிழந்த பெண்ணின் மருமகனின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது சம்பவம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.

சுகயீனம் காரணமாக தனது மனைவி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள சந்தேக நபர் திட்டமிட்டுள்ளார்.

சந்தேகநபர் வாக்குமூலம்

அதற்கமைய, சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான தடையை நீக்கும் நோக்கில் மாமியாரை கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

40 கோடி ரூபாவுக்கான நிலையான வைப்பு சான்றிதழ், காணி உறுதி பத்திரங்கள், உயிரிழந்த பெண்ணின் தங்க நகை, பணம் உட்பட ஆவணங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ராகம பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.  சந்தேக நபர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மஹரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.