தப்பிக்க வேறு வழியில்லை… திருமண நாடகத்தில் களமிறங்கிய ரஷ்யா வீரர்கள்

0
188

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 100 நாட்களை கடந்தும் நீடித்துவரும் நிலையில் போருக்கு அஞ்சும் ரஷ்ய வீரர்கள் தற்போது திருமண நாடகம் நடத்துவதாக தெரிய வந்துள்ளது.

உரிய போர் பயிற்சி ஏதுமற்ற இளம் வீரர்களையே ரஷ்யா உக்ரைனில் களமிறக்கியிருந்தது. இதனால் முதல் சில வாரங்கள் மட்டும் அவர்கள் உக்கிரமாக போரிட்டு வந்தனர்.

ஆனால் மிக விரைவில் உணவு உட்பட தட்டுப்பாடு ஏற்பட பல ரஷ்ய வீரர்கள் சோர்ந்து போனதுடன் போரில் ஆர்வமின்றி உக்ரைனில் இருந்து வெளியேறினால் மட்டும் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும், உக்ரைன் தரப்பின் உக்கிர பதிலடியும் ரஷ்ய வீரர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. இதனால் தற்போது திருமணம் முடிவானதாக கூறி ரஷ்யாவுக்கு தப்பிக்க முடிவு செய்துள்ளனர் பல இளம் வீரர்கள்.

ரஷ்ய இராணுவ வீரர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட உக்ரைன் தரப்பு உளவுத்துறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக வெளியேறும் உத்தரவு வரவேண்டும் அல்லது காயம்பட வேண்டும். அல்லது கொல்லப்பட வேண்டும். இதில் எதேனும் ஒன்று நடந்தால் மட்டுமே தம்மால் உக்ரைனை விட்டு வெளியேற முடியும் என ஒரு வீரர் தமது நண்பருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமண நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் அதனால் தம்மை அதிகாரிகள் போர் முனையில் இருந்து விடுவிப்பார்கள் எனவும் அவர் தமது நண்பரிடம் கூறியுள்ளார்.

உக்ரைனில் தற்போதுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்பவே ஆசைப்படுவதாக அந்த வீரர் தெரிவித்துள்ளார். ஆனால், விளாடிமிர் புடின் நிர்வாகம் சமீப காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவராது என்றே கூறப்படுகிறது.