ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்

0
217

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்த 46 வயதான உபுல் ரோஹன தர்மதாச உயிரிழந்துள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த பத்தஹேவாஹெட்ட தமுனுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த உபுல் ரோஹன தர்மதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 5ஆம் திகதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலையானது இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கண்டி வெலம்பொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் உயிரிழந்தவருடன் ஒரே அறையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த உபுல் ரோஹன தர்மதாச அக்குறனையில் உள்ள நிறுவனமொன்றில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் ஜப்பானில் உள்ள நிறுவனமொன்றில் பணிக்கு அனுப்பப்பட்டதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் மூன்று வருட சேவையை முடித்துக்கொண்டு அடுத்த சில நாட்களில் இலங்கை திரும்ப திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

உபுல் ரோஹன தர்மதாசவை ஜப்பானுக்கு அனுப்பிய நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரே, அவர் கொல்லப்பட்டுள்ள விடயத்தை அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.