நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் எவருக்கும் நான் ஆதரவளிப்பேன் – அங்கஜன்

0
451

நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் துணை நிற்பபேன். என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

இன்று தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இருவேறு வாக்கெடுப்புக்களில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் இன்று திருத்தங்கள் இன்றி நிறைவேறியுள்ள நிலையில், இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியத்துவமான திருத்த முன்மொழிவொன்றை

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் முன்வைத்திருந்தார். அதாவது, சட்ட மூலத்தின் 4வது சரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தனியாருக்கு வழங்கும்போது

10MW க்கு மேற்பட்ட திட்டங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடைய கேள்வி கோரல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் திருத்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக 54 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த திருத்த முன்மொழிவுக்கு நானும் ஆதரவாகவே வாக்களித்தேன்.தனியார் நிறுவனங்களுக்கு பாரிய திட்டங்களை கையளுக்கும்போது

திறந்த கேள்விகோரல்கள் கடைப்பிடிக்கப்படுவதானது ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்தும். மாறாக கேள்விகோரல்கள் இல்லாமல் திட்டங்களை கையளிக்கப்படுகையில் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எமது நாட்டுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில்,

அந்த திட்டங்களை வழங்கும்போது அதில் ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டியதும் மக்கள் பிரதிநிதிகளின் தார்மீக பொறுப்பாகும். அதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாகவும்,ஹர்ச டி சில்வா முன்வைத்த திருத்த முன்மொழிவுக்கு ஆதரவாகவும், எரிசக்தி அமைச்சர் முன்வைத்த 4ம் சரத்தின் திருத்தத்தோடு இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான வாக்கெடுப்பில் எதிர்த்தும் வாக்களித்திருந்தேன்.

ஊழல்களற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் நாம் என்றும் பயணிக்க தயாராக உள்ளோம். 9 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சார திருத்த சட்டமூலமானது,

25 MW மற்றும் அதற்கு மேற்பட்ட மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒருவருக்கு மின் உற்பத்தி உரிமம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி, உற்பத்தித் திறனில் தடையின்றி எவரும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.

இதேவேளை, இந்த முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் கட்சிகள் எவையும் கலந்துகொள்ளாதது ஏமாற்றமளிக்கும் விடயமாக அமைகிறது.