கப்புடா கதையால் ஆங்கிலத்தில் பேச மறுத்த பஸில்!

0
719

காகத்தை ஆங்கிலத்தில் ‘கப்புடா’ என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பில், விளக்கமளிப்பதற்காக பஸில் ராஜபக்ச ஊடக சந்திப்பை ‘மொட்டு;க் கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்ற ஊடகர் ஒருவர், பஸில் ராஜபக்சவிடம் ஆங்கில மொழியில் கேள்வி கேட்டார்.

இதற்கு சிறிது நேரம் ஆங்கிலத்தில் பதிலளித்த பஸில், ஒரு கட்டத்தில் தடுமாறினார்.

சுதாகரித்துக்கொண்ட அவர், “ஏற்கனவே, ‘கப்புடா’ சர்ச்சையில் சிக்கியுள்ளேன். தெரிந்த மொழியிலேயே கதைக்கின்றேன்” எனப் புன்னகையுடன் குறிப்பிட்டு உரையைத் தொடர்ந்தார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காகத்துக்கு ‘கிரவ்’ எனக் கூறாமல், சிங்கள மொழியில் போன்று ‘கப்புடா’ என பஸில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விடயம் சமூகவலைத்தளங்களில் ஹிட்டானது. ‘கப்புட்டு கா… கா …. பஸில், பஸில்’ எனப் பாடல்கூட இயற்றப்பட்டது. பலரின் தொலைபேசிகளில் ரிங் டோனாகவும் மாறியது.

தனது தொலைபேசி ரிங்டோன்கூட அதுதான் என பஸில் இன்று குறிப்பிட்டார்.