சிறப்பாக செய்வோம் என 20 ஆவது திருத்தத்தைக் கேட்ட அரசாங்கம் இன்று மௌனம்…

0
226

சிறப்பாக செய்வோம் என்பதற்காகவே 20 ஆவது திருத்ததை அரசங்கம் கொண்டு வரட்டும் என இடமளித்தவர்கள், இன்று நிலைமாறி அனைத்து கட்சிகளும் 21 ஆவது திருத்தத்தைக் கொண்டு வர அழைப்பு விடுக்கின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் எந்தளவுக்கு சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் நன்றாகவே புலப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேசிய கட்டுமான சங்கத்தின் அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாளிகைக்குள் இருந்து எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே எனவும் தெரிவித்தார்.

கட்டுமானத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் பத்து இலட்சம் பேர்கள் ஈடுபடுவதாகவும், சுமார் 40 இலட்சம் மக்கள் இதை நம்பியே ஜீவனோபாயம் நடத்துவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று கட்டுமானத் தொழில் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழல்வாதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த ஊழல்வாதிகளை அரசாங்கம் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.