இலங்கைக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நாடு!

0
459

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுத்து, வடக்கிலுள்ள தீவக மீனவர்களுக்கு சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவின் ‘அக்ஷயபாத்ரா’ மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் வடமாகாண மக்களைச் சென்றடைவதன் ஒரு பகுதியாக, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய வட மாகாண தீவுகளைச் சேர்ந்த மீனவக் கூட்டமைப்புகள் இந்திய மானியத்தைப் பெற்றனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் மீனவர்களுக்கான விநியோக நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்து வைத்தனர்.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு மீனவருக்கும் தலா 20 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அண்மைய எரிபொருள் விலையேற்றம் காரணமாக அண்மைய வாரங்களில் பல மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெய் உதவித் தொகை வழங்குமாறு யாழ்.மீனவர் கூட்டமைப்பு சங்கம், இந்திய துணைத் தூதரகம் ஊடாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்திய உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வார ஆரம்பத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழக அரசின் உதவியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட அரிசி மற்றும் பால்மா என்பன விநியோகிக்கப்பட்டன.