மேலுமொரு சிறுவனை பலியெடுத்த எரிபொருள் தட்டுப்பாடு; இலங்கையில் தொடரும் சோகம்

0
546

வயிற்று வலியால் அவதியுற்ற சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தக்கு எரிபொருள் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளது.

மஸ்கெலியாவில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தைச் சார்ந்த 8ஆம் தரம் கல்வி பயின்ற மாணவன் கடந்த சனிக்கிழமை வயிற்றில் ஏற்பட்ட வலியால் அவதியுற்றுள்ளார்.

இதனையடுத்து சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முச்சக்கர வண்டியை நாடியபோது எரிபொருள் இன்மையால் உடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அச் சிறுவன் பரிதாபமாக உயிர்ந்துள்ளார். இந்நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுவன் நியூமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை சிறுவனின் தந்தை சிறையில் உள்ளதாகவும், தாய் தோட்டத்தில் வேலை குறைவால் கொழும்பில் பணி புரிந்து வருவதாக உயிரிழந்த சிறுவனின் பாட்டி கூறியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்கனவே பிரிதொரு குழந்தை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.