கோட்டா கோ கம வன்முறை சம்பவம் தொடர்பில் 1500 பேர் கைது!

0
62

இலங்கையில் “கோட்டா கோ கம”, “மைனா கோகம” இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9 ) தொடர்பில் இன்று ( 22-05-2022) நண்பகல் வரை சுமார் 1500 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர். 

நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவானதாக 844 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அவை தொடர்பில் இவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந் நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 1500 பேரில் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 101 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” மீதான அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது.

இந் நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கலின் கீழும் மாவட்டங்களின் பிரதிபொ பொலிஸ் மா அதிபரின் கீழும் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப் பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த 1500 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அரசியவாதிகள் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தமை தொடர்பிலேயே பெரும்பாலான கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அப்பாவிகள் பலரைக் கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் பலர் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.