அமெரிக்க நிறுவனத்தில் பல இலட்சம் வருமான பணியில் அமர்ந்த எலக்ட்ரீஷியனின் மகன்!

0
770

எலக்ட்ரீஷியன் ஒருவரின் மகனான மொஹமத் ஆமீர் அலி, டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா (JMI) கல்வி நிறுவனத்தின் டிப்ளமோ மாணவர்.

இவருக்கு ஃப்ரிசன் மோட்டார் வெர்க்ஸ் (Frisson Motor Werks) என்கிற அமெரிக்க நிறுவனத்தில் 100,008 டாலர் (சுமார் 70 லட்ச ரூபாய்) ஆண்டு வருமானத்துடன் பணி கிடைத்துள்ளது.

இந்நிறுவனம் இவருக்கு வட கரோலியாவின் சார்லட்டில் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பொறியாளராக பணி நியமனம் செய்துள்ளது. ஜேஎம்ஐ கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து பொறியியல் படிப்பில் டிப்ளமோ படிக்கும் மாணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஊதியத் தொகை இதுதான் என அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேஎம்ஐ பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் எடுத்தபோதும் மொஹமத்திற்கு பொறியியல் படிப்பிற்கான அனுமதி கிடைக்கவில்லை. பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்ததும் 2015-ம் ஆண்டு ஜேஎம்ஐ-யில் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிக்கத் தீர்மானித்தார்.

மொஹமத் தோல்வியுற்றபோதும் எலக்ட்ரிக் வாகனங்களில் பணிபுரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வம் வழிவகுத்தது. இவரது திட்டம் வெற்றிபெற்றால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது என சர்வதேச பத்திரிக்கை தெரிவிக்கிறது.

மொஹமத் திட்டம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், ”இது புதிய பகுதி என்பதால் ஆரம்பத்தில் என்னுடைய ஆசிரியர்கள் இதை நம்பவில்லை. எனினும் உதவி பேராசிரியரான வாக்கர் ஆலம் இதன் சாத்தியக்கூறுகளை உணர்ந்து என்னை வழிநடத்தினார்.” கல்லூரி கண்காட்சி ஒன்றில் தனது ஆராய்ச்சியின் முன்வடிவத்தை மொஹமத் சமர்ப்பித்தார்.

அவரது திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் வாக்கர் ஆலம் அதை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். அப்போதுதான் சார்லட் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரிசன் மோட்டார் வெர்க்ஸ் நிறுவனம் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டது.

தனது மகனுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது குறித்து மொஹமதின் அப்பா ஷம்ஷத் அலி குறிப்பிடுகையில், “ஆமீர் எலக்ட்ரானிக் சாதனங்களின் செயல்பாடுகள் குறித்தும் மின்சாரம் குறித்தும் என்னிடம் கேள்வி கேட்பார்.

நான் எலக்ட்ரீஷியனாக உள்ளபோதும் என்னால் அவருக்கு பதிலளிக்கமுடியாது. எப்போதும் கடுமையாக உழைக்கவேண்டும் என அவரிடம் வலியுறுத்துவேன். அவரை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.