மன்னாரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை!

0
706

மன்னார் நகர பகுதியில் உள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்களின் மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்படாமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கையிருப்பில் காணப்பட்ட பெட்ரோல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்தது. எனினும் மக்களுக்கு வழங்கப்பட வில்லை.

அவசர தேவை கருதி மோட்டார் வாகனங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளச் சென்றவர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை. இதனால் அங்கு கூடிய மக்களுக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றுகின்றவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். எனினும் அங்கு கூடிய மக்கள் எரிபொருளைக் கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் மக்களுடன் கலந்துரையாடியதுடன், கையிருப்பில் உள்ள எரிபொருளை வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் வீதம் பெட்ரோல் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு அமைவாக எரிபொருள் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படையினருக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், மக்களுக்கு அவசர போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெட்ரோல் வழங்காமையினால் குறித்த முரண்பாட்டு  நிலை ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.