இலங்கைக்கு 10000 நிவாரணமாக வழங்கிய தமிழக யாசகர்!

0
259

இலங்கை வாழ் தமிழர்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என மக்களிடம் யாசகமாக பெற்ற 10,000 இந்திய ரூபாவினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

குறித்த யாசகர் இதற்கு முன்னரும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 50,000 வழங்கிய நிலையில் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளரிடம் 10,000 வழங்கியுள்ளார்.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறை சேர்ந்த யாசகர் பூல்பாண்டி பொதுமக்களிடம் யாசகமாக 10,000 இந்திய ரூபாயை பெற்றிருந்தார்.

அதனை நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற பூல்பாண்டி, மாவட்ட ஆட்சியர் விசாகனை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக வழங்கினார்.

இதேபோல் கொரோனா காலத்திலும் பொது மக்களிடம் யாசகம் பெற்று தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.