மட்டுப்படுத்தப்பட்டுள்ள அவசரமற்ற சத்திர சிகிச்சைகள்!

0
208

தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளில் அவசரமற்ற சகல சத்திர சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மருந்து மற்றும் சிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் என்பவற்றில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

அத்துடன் குத்தகைக்கு சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி தொழிற்துறையினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மெனிங் சந்தை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தற்போது டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எனினும் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாளிகாவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 6 மணிநேரம் காத்திருந்த ஒருவர் மீள வீடு திரும்பும் போது ஏற்பட்ட நோய் நிலையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.