பிரதமருக்கு எதிர்க்கட்சியில் இருந்து வந்த பாராட்டுக் கடிதம்!

0
601

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில், பல அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்பில் இருந்து பின்வாங்கிய வேளையில், நாட்டை மீட்டெடுக்கும் கடுமையான சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, (Ranil Wickremesinghe) நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) பாராட்டியுள்ளார்.

தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அவர், பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்ற போதிலும் அவ்வாறான நடவடிக்கை நடைமுறையில் இல்லை என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமையும் பட்சத்தில் தாம் ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் பிரதமர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளாரா என்றும், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் பின்பற்றும் பாதை வரைபடத்தை உடனடியாக வெளிப்படுத்துமாறும் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வரைபடத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் புதிய இடைக்கால அரசை ஆதரிப்பது குறித்து முடிவு எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.