ஆட்டிப்படைக்கும் கொரோனா: மூன்று நாட்களில் எட்டு இலட்சம் பேருக்கு தொற்று!

0
665

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டது.

யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார்.

இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.