நாடாளுமன்றத்திற்கான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

0
759

நாடாளுமன்ற ஊழியர்களின் வாகனங்களின் எரிபொருளுக்கான 56 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படாமையால் நாடாளுமன்றத்தின் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற போக்குவரத்து சேவைக்காக 9 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் 5 தனியார் பேருந்துகளும் ஈடுபடுகின்றன. அந்த பேருந்துகளுக்கான எரிபொருள் கட்டணமாக 56 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமையால் அவற்றுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வாகனங்களுக்கு இதற்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது.

இந்நிலைமை காரணமாக தலவத்துகொட உள்ளிட்ட ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவை நாடாளுமன்ற வாகனங்கள் என அடையாளப்படுத்தப்படும் போது, ​​அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் எரிபொருளை விநியோகிக்க தயக்கம் காட்டுவதாக மேலும் தெரியவருகிறது.