வன்முறை ஏற்புடையது அல்ல – வி.எஸ்.சிவகரன்

0
607

அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சன நாயக படுகொலை ஆகும். இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் ஆழ்ந்த கவலையடைகிறோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனநாயக உரிமை பண்பியல்புகளுக்கு மதிப்பளித்து முதன்மைப்படுத்த வேண்டியது தார்மீக பொறுப்பும் அடிப்படை உரிமையும் ஆகும்.

இந்த மரபைக் காக்க வேண்டியது ஆட்சியாளரின் இரகசியப் பிரமாணமும் ஆகும். அவ்விதமான நெறி முறையை அவமதிப்பது சம நீதியின்மையற்ற செயலில் ஈடுபட்டது பெரும் தேச விரோத குற்றமாகும்.

வன்முறையின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில் முன்னெச்சரிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு வெற்றி கொள்ள முனைவது சிறந்த சனநாயக தலைமைத்துவ பண்பியலாகும்.

அவசரக் கால சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்க முனைவதும், முப்படைக்குச் சுடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதும், ஜனநாயக நாட்டிற்கு உகந்தவை அல்ல. பொருளாதார நலிவடை வில் இருந்து நாட்டை மீட்சி அடைய வழி தேடுவதை விடுத்து வன்முறையை ஆயுதமாக்குவது மேலும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு நலிவடையும்.

இதை ஆட்சியாளர்கள் புரியாமல் இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. யுத்த வெற்றியின் யுக புருஷர்கள் எனக் கொண்டாடிய இதே பௌத்த தேசியவாத இனவாதிகள் அதே மே மாதத்தில் கூட்டுக் கோபத்தை உச்சபட்சமாக வெளிப்படுத்துவது ‘ஆறி நின்றது அறனன்று ‘ என்பதைப் புலப்படுத்துகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இந்த போராட்டக் காரர்கள் தமிழர்களின் எந்த விதமான அடிப்படை கோரிக்கையும் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். போர்க்குற்றவாளிகளுக்கு இது தண்டனை ஆகாது. நாம் எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் துளியளவும் இதில் மகிழ்வடைய முடியாது.

இது அவர்களுடைய உள்ளக அரசியல் பிரச்சினை. இதை நாம் மூன்றாம் தரப்பாகவே மிகத் தந்திரமான மதிநுட்பத்துடன் கையாள வேண்டும். எனவே தெற்கில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவெடுப்பது போல் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தங்கள் செயல்பாட்டை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

உருப்படாத உணர்ச்சிகரமான வார்த்தைகளைப் பேசி தமிழ் மக்களை உசுப்பேற்றி உண்மையின் நிழல் படாத பொய்யை உரத்துப் பேசி காலத்தை வீணாக்கியதைத் தவிர அவர்களின் சாதனை வெறும் பூச்சியமே எனப் பொதுமக்கள் விசனம் அடைகின்றனர்.

தூர நோக்கு இலக்கின்றி இராஜ தந்திர இராஜீக அணுகுமுறை இன்றி வெறும் வாக்கு வணிக வாய்ச்சொல்லில் வீரர்களாகவே காணப்படுவதுடன் தமிழ் மக்களின் பொது நலன் சார்ந்து இந்த இக்கட்டான நிலையில் கூட ஐக்கியப் படாமல் ஆளுக்கு ஒரு அறிக்கை விட்டு அநாகரீக அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே தமிழ் மக்களும் புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கட்டமைக்க நகர வேண்டிய காலம் கைகூடி வருவதாக வே தோன்றுகிறது. ஆகவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் மிக மிக நிதானமாகக் கூர்ந்து கவனித்து மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

ஏனெனில் பலமுறை இனக்கலவரம், இனப்படுகொலை என்பனவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் அந்த அனுபவத்திலிருந்து எமது முன்னோக்கிய நகர்வு கட்டமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.