சஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

0
629

சஜித்தை பார்த்து ஆசை, பயம் என நெட்டிசன்கள் நக்கலடிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரம் பெரும்பாலானவர்கள் மோசமான ஒரு சமயத்தில் தலைமையேற்க முன்வராதவர் தலைவருக்கான தகுதி இல்லாதவர் என தெரிவித்துள்ளனர்.

சஜித்தும் முன்வருகிறார் இல்லை. அவரது கட்சியில் உள்ள ஒருவரை போகவும் விடுகிறார் இல்லை என அவரோடு கலந்துரையாடியவர்கள் தெரிவிகின்றனர்.

அவரது ஒரே நோக்கம் பொதுத் தேர்தல். அதை நடத்தும் நிலையில் நாடு இல்லை. இடைக்கால அரசு ஒன்று குறுகிய காலம் ஒன்றுக்காவது பதவியில் இருக்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது.

கொதிநிலையில் உள்ள மக்கள் முன் தேர்தல் ஒன்றுக்காக போய் பேசும் அளவுக்கு நிலைமை இல்லை. மக்களது அடிப்படை பிரச்சனைகளை ஓரளவாவது தீர்த்த பின்னே எதையும் செய்ய முடியும். இப்போது போனால் செருப்பு கூட மிஞ்சாது.

இலங்கைக்கு உதவ பல நாடுகள் உள்ளன. ஆனால் கோட்டா தலைமையில் உள்ள அரசுக்கு யாரும் உதவ தயாராக இல்லை எனத் தெரிகிறது.

இலங்கைக்கு வெளியே உள்ள மக்கள் கூட ஒரு டொலரைக் கூட அனுப்ப மறுக்கும் சூழலே உள்ளது. ரசியாவிடமிருந்து நேரடியாக குறைந்த விலையில் எண்ணையை (பெற்றோல் – டீசல்) பெறக் கூடிய நிலை இருந்தும் , இந்தியாவிலிருந்து தரகர் மூலமாக அதிக பணம் கொடுத்தே அரசு எண்ணையை பெறுகிறது.

காரணம் அமெரிக்க குடியுரிமை பெற்ற அரசியல்வாதிகள் இலங்கை தலைமை பதவிகளில் இருந்து கொண்டு , தமக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என நினைக்கிறார்கள். இலங்கையின் நிலையை அமெரிக்கா – இந்தியாவிடம் உணர வைக்கும் தகமை கூட இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதே வருத்தமான உண்மை.

மகிந்த குடும்பம் தலை தப்பினால் போதும் என ஓடிவிட்டது. ஓடும் போது அனுமான் இலங்கைக்கு தீ வைத்து விட்டு ஓடுவது போல ஓடி திருகோணமலையில் முடங்கியுள்ளனர். சிலர் மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே தப்பி ஓடிவிட்டனர். காலிமுகத்திடலில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக மகிந்த மற்றும் அவரது சாகாக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சரியான சட்டம் என்றால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்களை கடற்படையினர் பாதுகாத்து வருகின்றனர். சட்டம் முறையாக செயல்படுமானால் அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியாது. ரணில் போன்றவர்கள் பாராளுமன்ற தலைமை ஏற்றால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பார்.

இது போல ஏற்கனவே விமல் வீரவங்சவை பிழையான கடவுச் சீட்டில் போக அனுதித்தவர்தான் ரணில். சஜித் கூட ராஜபக்சவினரின் செல்லப்பிள்ளை என கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. எனவே அவரது எதிர்கால அரசியல் கேள்விக் குறியாகலாம். ரஞ்சன் சொன்னது போல அவங்க எல்லாம் நண்பர்கள் தம்பி என்பது பொய்யேயில்லை.

கோட்டா பதவி விலகும் வரை அமைதி போராட்டம் தொடரும் என தெரிகிறது. இராணுவ தளபதி கூட அமைதியாக போராட்டம் செய்வோருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என மனித உரிமை ஆணையத்தை விட்டு வெளியேறி வந்த போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் பிரகாரமே தாங்கள் நடந்து கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரவே இராணுவம் வீதிக்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருந்தாலும் , மக்கள் அமைதியாக இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னைவிட அதிகமாக ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரம் அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட வேதனைகளை கொட்டித் தீர்த்துள்ளனர். மகிந்த தரப்பு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டது. அதிக ஆசை அதிக நட்டம். இனி அவர்கள் மட்டுமல்ல எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வீதியில் இறங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்றைய நிலை இலங்கை அரசியலில் பெரும் கேள்விகளோடு மக்களை தத்தளிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.