கடமை செய்யத் தவறிய கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த சோகம்!

0
232

கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று அறிவித்தது.

கடமையை சரிவர நிறைவேற்றத் தவறியமைக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் சரியான நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களைச் செய்ய 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபருக்கு, சனிக்கிழமை பணிப்புரை விடுத்திருந்தார்.

கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நீதிச் சேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை மே 4 ஆம் திகதி கடுவெல நீதவான் நிராகரித்திருந்தார்.