இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத தொழிற்சங்கத்தினர்!

0
468

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வியாழக்கிழமை (5) நள்ளிரவு முதல் 30 புகையிரத தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஈடுப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பொதுப்பயணிகள் மாற்று போக்குவரத்து சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என புகையிரத சேவை ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் எஸ்.கே.விதானகே தெரிவித்துள்ளார்.

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தது,

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வழிமுறைகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.

தமக்கு இன்னும் மக்களாணை உள்ளது ஜனாதிபதி உட்பட பிரதமர் குறிப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவுள்ளது.   

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 28ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றிப்பெற்றது.  

அரசாங்கத்திற்கு ஒருவாரம் காலவகாசம் வழங்கினோம். எனினும் ஜனாதிபதி உட்பட பிரதமர் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.  

இந்நிலையில், அரசாங்கத்தை பதவி விலக கோரி நாளை நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் 30 புகையிரத தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை இடம்பெறாது.  

அரசியல் தேவைக்காகவும், தொழில் உரிமைகளுக்காகவும் பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவில்லை. முழு அரசியல் கட்டமைப்பிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள போது அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு.

பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என்றார்.