பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

0
685

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றில் தற்போது இடம்பெறுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்காக இன்று நாடாளுமன்றில் நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரை செய்தார்.

அவரின் இந்த பரிந்துரைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை , ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மக்காரின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்தது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவருக்கு மேற்பட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக வாக்குச்சீட்டை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்கினை அளிக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.

வாக்குசீட்டில் தாம் ஆதரவளிக்க விரும்பு உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு, அதற்கு எதிரே வாக்களிக்கும் உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டுமென சபாநாயகர் அறிவித்தார்.

எனினும், இதன்மூலமாக இரகசியதன்மையை பேண முடியாது என்பதால், அதற்கு பதிலாக இலத்திரனியல் வாக்கெடுப்பையே நடத்துமாறு எதிர்க்கட்சியினர் கோரினர்.

எது எப்படி இருப்பினும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட முறையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதை சபாநாயகர் மேற்கோள் காட்டினார். இதனையடுத்து , ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களையடுத்து, வாக்கெடுப்பு ஆரம்பமானது.