நாடு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கான ஏற்பாடுகளில் தொழிற்சங்கங்கள்!

0
121

அரசாங்கத்துக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தை ஒருபடி மேலே கொண்டு செல்லும் வகையில் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நாடு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை தெளிவுபடுத்தியதாக தேசிய தொழிற்சங்க நிலைய உறுப்பினர் கே.டி லால் காந்த தெரிவித்துள்ளார்.

யார் போராடினாலும் மக்களுக்கு நியாயமான தேர்தலை வழங்குவதும், அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே அந்த போராட்டத்தின் இலக்கு என்று லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார்

பொதுமக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த நிர்வாக முடக்கலை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் பொதுமக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் செய்தியாக மே 6ஆம் திகதி நடைபெறும் நிர்வாக முடக்கல், அரசாங்கம் பதவி விலகும் வரை முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் பிரிவின்றி சுகாதார ஊழியர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி நிர்வாக முடக்கலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்