கனடாவில் களவாடப்பட்ட வாகனம் நைஜீரியாவில்…

0
93

கனடாவில் களவாடப்பட்ட வாகனமொன்று நைஜீரியாவின் நகரமொன்றில் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாரியோவைச் சேர்ந்த அஹமட் அப்தல்லாஹ் (Ahmad Abdallah) என்பவரின் எஸ்.யூ.வீ வாகனமொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது.

இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது. வாகனம் சில நொடிகளில் களவாடப்பட்டு ஓட்டிச் செல்லப்படும் காட்சிகள் கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது.

எனினும், களவாடியவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை, மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறு வாகனம் களவாடப்பட்டுள்ளதாக கருதப்பட்டது.

ஆறு மாத காலத்தின் பின்னர் இந்த வாகனம் நைஜீரியாவின் புறநகர்ப் பகுதியான லாகோஸில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த வாகனம் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதனைக் கண்டு அப்தல்லாஹ் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் வாகனங்கள் கொள்ளையிடப்படுவதாகவும் இந்த விடயம் பாரதூரமானது எனவும், இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அப்தல்லாஹ் கூறுகின்றார்.

மிகவும் பாதுகாப்பானது என கூறப்படும் கார்கள் எளிய கருவிகளைக் கொண்டு களவாடப்படுவதனை கனடா முழுவதும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய வாகனங்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதில் பாரியளவில் லாபம் கிடைக்கப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

றொரன்டோவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டாயிரம் கார்கள் களவாடப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனங்கள் களவாடப்பட்டு வேறும் நாடுகளில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.