கடும் விமர்சனத்தால் மனம் மாறிய இஸ்ரேல் பிரதமர்!

0
461

தனது குடும்பத்துக்கான சாப்பாட்டு செலவை, இனி தன் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வேன் என்று இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் (Naphtali Bennett) கூறியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் நப்தாலி பென்னட்(Naphtali Bennett) பிரதமராக உள்ளார். இவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடுமையான விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

பிரதமர் நப்தாலி பென்னட்(Naphtali Bennett) மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும், தனது வீட்டுக்காக 26 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.19.80 லட்சம்) செலவிடுவதாகவும், அதில், சாப்பாட்டுக்கு 7,400 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5.55 லட்சம்) செலவு செய்வதாகவும் ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே கோடீஸ்வரரான பிரதமர், இந்த செலவுகளை நியாயப்படுத்தினார். இது விதிகளுக்கு உட்பட்டது என கூறினார். ஆனால் இதை பொதுவெளியில் யாரும் ஏற்கவில்லை.

அனைவரும் விமர்சித்தனர். அதன் பிறகு அவரில் மனமாற்றம் ஏற்பட்டது. தனது குடும்பத்துக்கான சாப்பாட்டு செலவை, இனி தன் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வேன் என கூறி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “நான் பணத்துக்காகவோ, மரியாதைக்காகவோ பிரதமர் பதவியில் இல்லை. இஸ்ரேல் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்காக இவர் பெறும் மாதச்சம்பளம் 16 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12.37 லட்சம்) ஆகும். இவர் அரசியலில் குதிப்பதற்கு முன்னர் தனது 2 உயர் தொழில் நுட்ப நிறுவனங்களை 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.1,875 கோடி) விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.