ராஜபக்க்ஷ குடும்பத்தினர் கட்டாயம் பதவி விலக வேண்டும்!

0
96

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கட்டாயம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தையும் பயன்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தை திரட்டி வருகின்றோம். முறைமையை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

இதனால், நாங்கள் பெரும்பான்மை பலத்தை திரட்டி வருகின்றோம். யார் ஆதரவளிக்கின்றனர், யார் ஆதரவளிக்கவில்லை என்பதை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம். அப்போது மக்கள் அறிந்துக்கொள்வார்கள்.

நாங்கள் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணையை கொண்டு வரும் ஏற்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இருக்கின்றது. நாங்கள் அதனையும் ஆராய்ந்துள்ளோம். அதனை நாங்கள் படிப்படியாக செய்ய வேண்டியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வர முடியும். அதனையும் நாங்கள் செய்வோம்.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி வைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதில் இருந்து ராஜபக்சவினருக்கு தப்பிக்க முடியாது.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகிறது. அது நாட்டுக்கு தேவையில்லை. குடும்பத்தில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் பிரச்சினை இருந்தால், அது நாட்டுக்கு பிரச்சினையில்லை. அதனை வீட்டுக்கு சென்று தீர்த்துக்கொள்ளுங்கள்.