150km வேகத்தில் ஸ்டம்புகளை தெறிக்க விடும் இளம் வீரர்!

0
659

ஹைதாபாரத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிவேக பந்துகளை வீசி குஜராத் அணியினரை திணறடித்தார் உம்ரான் மாலிக்.

சக வீரர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க, மறுமுனையில் கச்சிதமாக பந்துகளை வீசியதுடன், எதிரணியினரை விக்கெட்டுகளை குறி வைத்து தூக்கிக் கொண்டிருந்தார் உம்ரான் மாலிக். அவருடைய சிறந்த பவுலிங், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன், இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

மும்பை வான்கடே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர் முடிவில் 195 ரன்களை விளாசியது ஹதராபாத் அணி. அபிஷேக் சர்மா 65 ரன்களை விளாச, எய்டன் மார்கிரம் 56 ரன்கள் எடுத்தார். இறுதியில் சஷாங் சிங் 6 பந்துகளில் 25 ரன்களை விளாசி மெகா இலக்கை நிர்ணயிக்க உதவினார். 

அடுத்து களமிறங்கிய குஜராத் அணியும் பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் சஹா 68 ரன்கள் எடுத்து, தனது முன்னாள் அணியான ஹைதராபாத் அணிக்கு தலைவலி கொடுத்தார். ஆனால் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் வீரர்கள் வரிசையாக நடையைக் கட்ட ராகுல் திவாட்டியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் இறுதியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரஷித் கான், இந்த முறை அந்த அணிக்கு எதிராக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்து துவம்சம் செய்தார். இவர்களின் அதிரடியில் குஜராத் அணியும் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. 

குஜராத் அணியின் 5 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் மட்டுமே எடுத்தார். குறிப்பாக விருதிமான் சஹாவை 153 கி.மீ யார்க்கர் பந்தில் கிளீன் போல்டாக்கினார். அவரின் பந்துவீச்சை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர், இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.