இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

0
115

மேற்குக் கரையில் நேற்றுக்காலை இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் காயமடைந்தனர். மற்றொரு பலஸ்தீனர் சுட்டுக்கொல்லப்பட்ட மறுதினமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெனின் நகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தபோதும் உயிரிழப்புப் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இஸ்ரேலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குறிப்பாக ஜெனின் நகரைச் சூழ இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் சுற்றிவளைப்புகளை நடத்தி வருகின்றன.

இதில் புர்கின் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அஹமது மசாத் என்பவரே இஸ்ரேலின் தற்போதைய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரது தலையில் சூடு நடத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் பலஸ்தீனத்தின் வபா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பிற்பகுதி தொடக்கம் இதுவரை 26 பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய அரபிகள் கொல்லப்பட்டுள்ளனர்.