யாழ்ப்பாணம்,வவுனியா,மட்டக்களப்பு மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிப்பு!

0
53

அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன.

இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை இன்றைய தினம் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.   

யாழ்ப்பாணம்

யாழ்பாணத்திலும் இன்றைய தினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைந்தளவிலேயே காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக வவுனியாவில் பாடசாலைகள் பல வெறிச்சோடியுள்ளன.

நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இருப்பினும் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மணவர்கள் சிலர் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தமையையும், ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று காலை முதல் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.

சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தபால் திணைக்களங்களங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.