காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

0
99

Pont-Neuf துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது சம்பவத்தை கண்டித்து காவல்துறை தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

24 வயதுடைய அதிகாரி ஒருவர் Pont-Neuf பகுதியில் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 25 மற்றும் 31 வயதுடைய இருவர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்திருந்தார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அதிகாரிகளை நோக்கி மகிழுந்தினால் மோத முற்பட்டனர். அதையடுத்தே அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

பின்னர், காவல்துறையினரை கண்காணிக்கும் காவல்துறையினரான IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரி கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் மீது ‘கொலை’ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து. காவல்துறை தொழிற்சங்கம் (Alliance Police Nationale) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது. பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Michel செயற்கை நீரூற்றுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் வரும் திங்கட்கிழமை (மே 2 ஆம் திகதி) இடம்பெற உள்ளது.