ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் முரண்பாடு!

0
517

அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதியினால் எழுதப்பட்ட கடிதத்துடன் இந்த விடயம் வெளிவந்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு மூன்று பிரிவுகளின் மகாநாயக்கர்கள் உட்பட பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எவ்வாறாயினும், இந்த அழைப்பு இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என தெரிவித்தார்.

எந்தவொரு புதிய அரசாங்கமும் தனது பிரதமரின் கீழ் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.