நாளை வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

0
249

“ஜனாதிபதியையும், பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் விடுமுறை தொடர்பில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.”

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”நாடளாவிய ரீதியில் தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம் காரணமாக பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அண்மையில் சுகயீன போராட்டத்தினை நடாத்தியிருந்தோம். அரசாங்கம் பதவி விலக இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு அந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

மீண்டும் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலகுமாறு மற்றுமொரு அழுத்ததினை கொடுத்து நாளை 28ஆம் திகதி வேலை நிறுத்தபோராட்டத்தினை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் விடுமுறை தொடர்பில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கவேண்டிய அவசியமில்லை.

நாளை நடைபெறும் இந்தவேலை நிறுத்த போராட்டத்தினை முழுமையான ஆதரவுடன் நாட்டின் ஏனைய தொழிற்சங்களும் ஈடுபட்டுள்ள இந்தவேளையில் வடக்கு கிழக்கில் உள்ள ஆசிரியர்கள்,அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் இணைந்துகொள்ள வேண்டும்.

இது நாட்டில் உள்ள ஜனநாயக பண்புகளையும் ஜனநாயகத்தினையும் வலியுறுத்தும் வகையிலான போராட்டம் என்பதை கல்விச்சமூகமாகிய நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதேநேரம் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரினால் அதிபர் அழைக்கப்பட்டு நாளை மாணவர்களுக்கு பரீட்சைகைளை நடத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் நாளை ஜனநாயக ரீதியாகவும் தாபன விதிக்கோவைக்கு அமைவாகவும் கல்விச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக நாங்கள் இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம்.

ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெறுபோது அதற்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்வதை கல்வி அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டு கல்வி அபிவிருத்தி தொடர்பில் சிறந்த கல்வியியலாளர்களை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேபோன்று மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திலிருந்து இரவு நேரங்களில் சில உதவி கல்வி பணிப்பாளர்கள்,கல்வி ஆலோசகர்கள் பெண் ஆசிரியர்கள் சிலரை தொலைபேசியில் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது குறித்து எங்களிடம் முறைப்பாடுகள் வந்துள்ளன இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.