மண்ணெண்ணெய் வாங்க சென்ற ஹட்டன் நகர வர்த்தகர் உயிரிழப்பு!

0
67

வீட்டுக்குத் தேவையான மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இன்று காலை உயிரிழந்தவர் ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது.

ஹட்டன் நகரில் வாடகைக்குக் கடையொன்றைப் பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) மாலை 5 மணியளவில் மண்ணெண்ணெய்யைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்குச் சென்று, சுமார் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாகத் தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காகப் பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.