பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கேள்வி

0
42

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் இவ் விடயத்தில் அடுத்த வழக்கு விசாரணையின்போது தீர்க்கமான முடிவொன்றை நீதியரசர்கள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், தம்மை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதியரசர் நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் பேரறிவாளன் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பேரறிவாளன் தரப்பு சட்டத்தரணி மன்றிற்கு எடுத்துரைத்ததை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம், இந்த விவகாரத்தில் ஏன் தமிழக அரசு ஒரு முடிவெடுத்து பேரறிவாளனை விடுவிக்கக்கூடாது என நீதியரசர்கள் கேள்வியை முன்வைத்தனர்.

எனினும் மத்திய அரசு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநருக்கு உள்ள அதிகாரம் வெறும் குறைந்தபட்ச அதிகாரமே எனவும் வாததத்தை முன்வைத்தபோது குறுக்கிட்ட நீதியரசர்கள் ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது கூட்டாட்சி முறைக்கு தவறான முன் உதாரணமாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டி ஆளுநருக்கு அதிகாரம் இருக்கும்போது அவரே முடிவு எடுத்திருக்க வேண்டும் என்பதுடன், அதிகாரம் இல்லாத விவகாரத்தில் ஜனாதிபதிக்கு அனுப்புவதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தையும் பரிலீசித்துவருகின்றனர்.

இறுதியாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஏன் தீர்மானமொன்றை எடுக்ககூடாது என கேள்வி எழுப்பிய நீதியரசர்கள், இந்த வழக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் உச்ச நீதிமன்றத்திற்குள்ள பிரத்தியேக அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவிக்குமா? அல்லது மத்திய அரசின் வாதத்தை ஏற்று இந்த விவகாரத்தில் முடிவெடுக்குமா? என்று விரைவில் தெரியவரும்.