ஜனாதிபதி அனுப்பிய கடிதத்திற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும் – தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

0
38

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திற்கு கூடிய விரைவில் பதிலளிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் நிலைப்பாடு சம்பந்தமாக பிரதமர் முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளது. இந்த வேலைத் திட்டத்திற்கு தலைமை தாங்கி 11 கட்சிகள், சுயாதீனமாக இயங்கும் அணியும் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுப்போம்.

அப்படி இடைக்கால அரசாங்கத்தில் இணைவது என்றால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் கலந்துரையாடவுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உடனடியாக பதிலளிக்க எதிர்பார்த்துள்ளோம்.

பிரதமர் பதவி விலக போவதில்லை என்று கூறினாலும் அது எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டிய விடயம். நாங்கள் சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான விடயம் பற்றி மாத்திரமே பேசி வருகிறோம்.

பிரதமர் பதவி விலகுவாரா அல்லது ஜனாதிபதி பதவி நீக்குவாரா என்ற விடயங்கள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்கள். பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களின் நிலைப்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவர்.

தற்போதைய அரசாங்கம் இதே விதமாக முன்நோக்கி செல்ல முடியாது, பிரதமர் அது பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். இது தனியாக பொதுஜன பெரமுனவுக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, ஏனைய கட்சிகளுக்கோ செய்யக் கூடிய வேலையல்ல.

இது நாங்கள் பதவி,பட்டங்களை காத்துக்கொள்ள மேற்கொள்ளும் வேலைத்திட்டம் அல்ல. அதிகாரத்தை கைப்பற்ற செய்யும் வேலையும் அல்ல. எமக்கு ஆட்சியை கைப்பற்றவும் ஆட்சி செய்யவும் நாடு ஒன்று இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் ராஜபக்சவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே கூறுகின்றனர். ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய காலம் செல்லக் கூட பணி.

ஜனாதிபதி பதவி விலகவில்லை என்றால் குற்றப் பிரேரணையை கொண்டு வந்து அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். அதுவும் நீண்டகாலம் செல்லும் செயற்பாடு.

இதனை விடுத்து 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற விடயம் தொடர்பிலேயே நாங்கள கவனம் செலுத்துகிறேன் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.