காலிமுகத் திடலில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளனவா- திருச்சபையின் அறிவிப்பு!

0
139

கொழும்பு – காலிமுகத் திடலில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று விசேட ஆராதனைகள் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சிறப்பு ஆராதனைகளை நடத்தப்படுவதற்கு இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே, கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மக்களின் தலைமைத்துவத்தின் கீழ் நடத்தப்படும் போராட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த போராட்டத்திற்கான முழு ஆதரவையும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், போராட்டக் களத்தில் வழிபாடுகளை நடத்துவதற்கு எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அருட்தந்தை சிறில் காமினி கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் விசேட ஆராதணைகளை நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயங்களில் உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.