ஊழல் அரசாங்கத்திடம் பணம் அனுப்பமாட்டோம்- வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் திட்டவட்டம்!

0
418

இலங்கை 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளமை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன.

இலங்கையின் கடன் தொகையானது 51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியின் புதிய நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் டொலர்களை அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராக புதியவர் தெரிவு - Ethiri ,எதிரி இணையம்
நந்தலால் வீரசிங்க

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள துரதிஷ்டவசமான நிலைமையை கவனத்தில் கொண்டு, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவ்வாறு வழங்கப்படும் நிதியானது உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் உறுதியளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெயரை வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர், நாட்டுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசாங்கத்திடம் பணத்தை வழங்க தயாரில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை தாம் வழங்கும் நிதி வினைதிறனாக மற்றும் சரியாக பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என கனடாவில் வசித்து வரும் கணனி பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் உள்ள மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையிட்டதாக பிரித்தானியாவில் வசிக்கும் தாதி அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு நிதி வழங்க மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாட்டு கடனைகளை செலுத்த முடியாமை, அத்தியவசிய உணவு பொருள், மருந்து தட்டுப்பாடு மேலும் அதிகரித்து நிலைமை மிக மோசமாக மாறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

மேலும் நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை புரட்சிகரமான கட்டத்தை நோக்கி செல்வதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் அது 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட வீடு நெருக்கடிக்கு இணையான நிலைமையாக மாற வாய்ப்புள்ளதாகவும்  பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.