ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது : வெள்ளையன் சுப்பிரமணியன்

0
404

ஓட்டிசம் பிள்ளைகளுக்குரிய கணக்கெடுப்பு இல்லாததால் அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இயலாமை உள்ளவர்களுக்கான தேசிய சபையில் உறுப்பினர்களில் ஒருவரான வெள்ளையன் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஓட்டிசம் பிள்ளைகள் தொடர்பில் அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“ஓட்டிசம் என்பதற்கு இலங்கையில் தற்புணர்வு ஆள்கை என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இது எப்படி ஏற்படுகின்றது என்பதற்கு விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகள் இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆண், பெண் இருவரிலும் இருக்கும் 23 நிறமூர்த்தங்களில் 21ஆவது நிறமூர்த்தம் இணையும் போது ஏற்படும் குழப்பத்தினால் இவ்வாறான ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கின்றனர் என ஒரு ஆய்வு சொல்கின்றது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் அதி விவேகமான பெற்றோருக்கு இந்தப் பிள்ளைகள் பிறப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தப் பிள்ளைகள் பிறக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயலாமைக்குரிய மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமானதாகத்தான் இருக்கின்றது.

ஏனெனில், 30 வருடப் போரில் இலங்கையின் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இயலாமையுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இவர்கள் யுத்தத்தினால் விசேட தேவையுடையவர்களாக மாறியவர்களாக இருக்கின்றார்கள்.

உதாரணமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் தங்கள் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருப்பவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.

இலங்கையில் வடக்கு கிழக்கில் இயலாமையுடைய பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர். அத்துடன், வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு, இவ்வாறு விசேட தேவையுடையவர்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்ற எண்ணிக்கை விபரங்கள் பெறப்படவில்லை.

அரசாங்கத்தினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் என்ற மட்டத்திலேயே ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்களே தவிர, முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பான முழுமையான கணக்கெடுப்பை மேற்கொண்டால், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கின்றார்கள் என்ற தகவல் சர்வதேச மட்டத்தில் தெரியவரும் என்று அரசாங்கம் பயப்படுகின்றது.

இதேபோன்று தான் ஓட்டிசம் உள்ள பிள்ளைகளின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு கிராமசேவை உத்தியோகத்தரிடம் உங்கள் பிரிவில் எத்தனை ஓட்டிசம் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று கேட்டால், அவருக்கு அது பற்றி தெரியாது. ஏனென்றால், ஓட்டிசம் என்றால் என்னென்று தெரியாது.

இது பற்றிய கணக்கெடுப்பு இல்லாததால், இவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஒரு கணக்கெடுப்பு இருந்தாலே இவர்களுக்கான பாடசாலைகள், மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

முதலில் ஓட்டிசம் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்து, அவர்கள் மூலம் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டாலே ஏனைய விடயங்களை மேற்கொள்ளலாம். முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியது கணக்கெடுப்பு இது” என தெரிவித்துள்ளார்.