தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு இதுவே சிறந்த தருணம்! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்..

0
175

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.

“கொழும்பில் ஒற்றுமை” என்ற பெயரில், இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களிலிருந்து விடுபடுவதற்குச் சிங்கள சிந்தனைக் குழுவின் உத்தியாகக் கூட இது இருக்கலாம். வடக்கு, கிழக்கில் எந்தவொரு தமிழர்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் பொருளாதார ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்று பலவீனமாக உள்ளது, உணவில்லை, பணமில்லை, பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இது மற்ற நாடுகளுக்குச் சந்தைப்பங்கை இழக்கிறது. இலங்கையால் வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியவில்லை..

இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற பணக்கார நாடுகளில் தங்கியுள்ளது. எனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் பொது வாக்கெடுப்பு அல்லது சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இந்த நாடுகளிடம் கேட்க வேண்டும். தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு, இந்த நாடுகள் இலங்கையுடன் பேரம் பேச இதுவே சிறந்த தருணம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அல்லது அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தமிழர்கள் சார்பில் வாதாடக்கூடிய சில புதிய துணிச்சலான இளைஞர்களைக் கொண்டுவர வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.