புளியங்குளத்தில் அரச காணியை அபகரிக்க முயன்றதாக கூறப்படும் மூவர் கைது

0
180

வவுனியா வடக்கு – புளியங்குளத்தில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் அரச காணியை அபகரித்து துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள முயன்றதாக கூறப்படும் மூவர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் அரச காணியை அத்துமீறி அபகரிக்கச் சிலர் நேற்று முயன்றுள்ளனர். எனினும் அவ்வாறு முயற்சித்தவர்கள் அரசியல் கட்சி ஒன்றின் பின்னணியுடன் செயற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அரச காணி அபகரிப்பு குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து அரச காணியை அத்துமீறி அபகரிக்க முயன்றவரும் துப்பரவுப்பணிகளை மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

புளியங்குளத்திலுள்ள அரச காணியை அத்துமீறி அபகரிக்க முயற்சித்தவர்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் மூவர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் அக்காணிக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.