அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் சந்திப்பு! கமல் குணரத்னவின் கருத்து

0
525

சிங்கள பெளத்தர் ஒருவரை நாட்டின் அரச தலைவராக்க 8 முஸ்லிம்கள் தமது உயிரை துறப்பார்களா? என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne )கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவினை வழங்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில், தற்போதைய அரச தலைவரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளிலேயே, தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும் ஆதாரவு இருப்பது உணரப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் மொத்தமாக 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக கம்பஹா, கொழும்பு, கண்டி, குருணாகல், புத்தளம் நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 170 பேர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்களில் 45 பேர் விளக்கமறியலில் உள்ளனர். 13 பேரிடம் தடுப்புக் காவலில் விசாரணை நடக்கிறது. 30 பேர் பிணையில் உள்ள நிலையில் 6 பேருக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், அவரை அழைத்து விசாரிப்பது தொடர்பில் சி.ஐ.டி.யினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.