வெல்லப்போவது சந்தர்ப்ப அரசியலா? ? பொதுமக்கள் எழுச்சியா? நெருக்கடி நிலைக்குள் தொடர்ந்தும் கோட்டாபய

0
116

நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் தீவிரமாகி வருகின்றன.

எனினும் அரசாங்கம் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என்பது மக்கள் மத்தியில் அதிகமான வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.அரசாங்கம், பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அதில் இருந்து தப்பிக்கொள்ளும் வழிகளையும் இருப்பை தக்கவைத்து கொள்ளும் வழிகளையும் தேடிக்கொண்டிருக்கிறது

பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அரச சத்தோச விற்பனையகங்களில் கூட பொருட்கள் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விற்பனையகங்களில் பொருட்கள் இருக்கின்றபோதும் மக்கள் மத்தியில் கொள்வனவுக்காக போதிய பணம் இல்லை.

எனவே ஆக மொத்தத்தில் இலங்கையில் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகள் இல்லாத நிலை ஒன்றே ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்கட்சியினரும் ஏனைய பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்தி வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர் விமர்சனம் வெளியிட்டு வந்த அரசாங்கம் இன்று, அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

எனினும் அரசாங்கம் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மிக காலம் தாமதித்த செயற்பாடு என்று அனைவரும் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போதைய இந்திய கடனுதவியில் இலங்கைக்கு உணவுப்பொருட்களும் எரிபொருட்களும் கிடைக்கின்றன.

இது தீர்ந்து போன பின்னர் மற்றும் ஒரு நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது.

தற்போதைக்கு சீனா 2.5 பில்லியன் டொலர்களை தருவதாக உறுதியளித்துள்ளபோதும், அது இலங்கையின் பொருளாதாரத்தை அல்லது மக்களின் உடனடியான தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிய விடயமாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளபோதும் அதனால் உடனடியாக நன்மை கிடைக்கும் என்று கூறமுடியாது.

எனவே பொருளாதார பிரச்சினையில் இலங்கை மக்கள் தொடர்ந்தும் கஸ்டப்படவே போகின்றனர்.

மறுபுறத்தில் அரசியல் நெருக்கடியை பொறுத்தவரை அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகி வருகின்றபோதும், அரசாங்கம் விட்டுக்கொடுக்காத போக்கை கடைப்பிடித்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகவேண்டும். மஹிந்த ராஜபக்ச உட்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகவேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றபோதும், அதனை கோட்டாபய தரப்பு இன்னும் கருத்திற்கொள்ளவில்லை என்றே கருதப்படுகிறது

இதன் பிரதிபலிக்கவே, கோட்டாபய விலகமாட்டார் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் அறிவி்ப்பும், மஹிந்த ராஜபக்சவின் நியாய உரையும் அமைந்திருந்தன.

மறுபுறத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் இருந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு சுயாதீனமாக செயற்படுவதாக கூறும் 11 கட்சிகளுக்கும் அரசாங்கம் தமது நம்பிக்கையை காட்டவில்லை.

இந்த 11 கட்சிகளில் உள்ளடங்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாந்த பண்டாரவை ராஜாங்க அமைச்சராக நியமித்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ச, நம்பமுடியாதவர் என்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

இது அரசியல் ரீதியாக இன்னும் குறுக்கு வழிகளை தேடும் அவரின் செயலாகவே கருதவேண்டியுள்ளது.

இந்தநிலையில் சாந்த பண்டாரவை விலக்கினால் கோட்டாபயவுடன் பேச்சு நடத்தலாம் என்று 11 கட்சிகள் நிபந்தனை விதித்துள்ள நிலையில், அரசியலின் குறுகிய கால அவகாசத்துக்காக சாந்த பண்டாரவை, ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கவும் முயற்சிக்கலாம்.

ஏனெனில் அரசாங்கத்துக்கு தமது கொள்கைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு புதிய விடயமல்ல.

அதேநேரத்தில் இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் இடம்பெறக்கூடாது என்று 11 கட்சிகளின் நிபந்தனைக்கு கோட்டாபய இணங்குவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

மறுபுறத்தில் கோட்டாபய பதவி விலகிய பின்னரே அடுத்த செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என்ற கொள்கையை முன்னெடுத்துள்ள சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அனுரகுமாரவின் தலைமையிலான ஜேவிபியும் அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டாபயவுக்கு எதிராக குற்றப்பிரேரணையையும் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் கொண்டு வர முயற்சிக்கிறது.

இதன் மூலம் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதைக் காட்டிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் மத்தியில் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் செயல்திட்டம் வெற்றி பெறும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நினைக்கிறது.

எனினும் இந்த இரண்டு பிரேரணைகளையும் நாடாளுமன்றில் கொண்டு வர நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடமளிப்பாரா என்பது வினவத்தக்க விடயமாகும்.

அதேநேரம் பொதுமக்களின் எழுச்சிக்கு மத்தியில் அரசாங்கத்தின் ஆதரவு குழுக்கள் மேற்கொள்ளும் அரசாங்கத்தை ஆதரிக்கும் போராட்டங்களும் இடம்பெறவே செய்கின்றன.

இது ராஜபக்சர்களுக்கு எதிரான பிரிவினருக்கும் ஆதரவான பிரிவினருக்கும் இடையில் பதற்றத்தை தோற்றுவிக்கவும் இடமுண்டு.

இதன்மூலம் மக்கள் எழுச்சியை திசை திருப்பவும் முயற்சிக்கப்படலாம்.

ஆகவே பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி விடயங்களில் பதவி ஆசையா? பொதுமக்கள் எழுச்சியா? இறுதியில் வெற்றிப்பெறும் என்பதை அடுத்து வரும் சில நாட்களில் தெரிந்து கொள்ளமுடியும்.