அரசாங்கம் மீண்டும் பழைய வழமையான பாதையில் பயணிக்க முடியாது: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

0
123

அரசாங்கம் மீண்டும் பழைய வழமையான பயணத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது, இதற்கு உரிய தீர்வுகளை வழங்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றிரவு ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வழமையான பாதையில் பயணிக்க முடியாது என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு முன்னோக்கிச் செல்ல முடியாது.

மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். நாட்டை நெருக்கடிக்கு இட்டுச் சென்றவர்கள் பல்வேறு வேடங்களில் இன்னமும் அரசாங்கத்திலேயே அங்கம் வகிக்கின்றன.

அவ்வாறான ஓர் நிலைமையில் நாட்டை முன்னோக்கி நகர்த்தமுடியாது. பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுப்போம்.

புதிய ஆட்சி கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் இடமளிக்க வேண்டும். நாடு இவ்வாறான கடும் சரிவில் இருக்கும் போது அமைச்சு பதவிகளுக்கு ஆசைப்படுவோரை என்ன சொல்வது.

அவ்வாறான நபர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அவ்வாறான நபர்கள் இந்த நாட்டின் ஜனநாயக அரசியலில் இருக்க வேண்டியவர்கள் அல்லர்.

ஏதாவது ஓர் வழியில் அமைச்சரவையை அமைத்து தொடர்ந்தும் ஆட்சி செய்ய முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறு. மக்கள் அதனை வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

சில வேளைகளில் பசில் ராஜபக்ச மறைத்து வைத்த பணத்தைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கலாம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.